காதலில் விழுந்த காளை
வாழ்நாளில் நடைபெற்ற எந்தப் போரிலும் வீழ்ச்சியைக் காணாதவர் என்று பலவாறாகப் புகழ்ந்து போற்றப்படும் ராஜேந்திர சோழர், ஓர் இளம்பெண்ணின் கடைக்கண் வீச்சில் வீழ்ந்தார் என்பது வரலாற்று வினோதம். இராஜேந்திர சோழர் கி.பி.1012-ம் ஆண்டு தஞ்சைப் பேரரசின் இளவரசராக முடிசூட்டப்பட்டார். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ருசிகரமான சம்பவம் நிகழ்ந்தது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
இராஜேந்திரன் தஞ்சையில் இருந்தாலும், இரண்டாவது தலைநகர் என்ற பெயரைப் பெற்ற பழையாறையில் இருந்தாலும் அடிக்கடி திருவாரூர் சென்று, அங்குள்ள கோவிலில் தியாகேசப் பெருமானை வழிபடுவது உண்டு.
ஒரு நாள் ராஜேந்திரன் தனது பரிவாரங்களுடன் திருவாரூர் கோவிலுக்கு வந்தார். அன்றைய தினம் இறைவன் முன் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாலும், இளவரசரின் வருகையாலும் கோவில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டு இருந்தது.
கோவில் பணியாளர்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். இசைக்கலைஞர்கள் ஓரிடத்தில் அமர்ந்து தங்கள் கருவிகளில் சுருதி மீட்டிக்கொண்டு இருந்தனர். பாடல்களைப் பாடுவதற்காக வந்த கலைஞர்கள் தங்கள் குரல் வளத்தைப் பரிசோதித்துத் தயாராக இருந்தனர். நடனத்தில் பங்கேற்கும் தளிச்சேரிப் பெண்கள், அலங்கார உடை அணிந்து கொண்டு, மலர்த்தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று அங்கும் இங்கும் சென்று வந்தபடி இருந்தனர்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
கோவிலை வழக்கம் போல வலம் வந்த ராஜேந்திரன், கருவறை முன் நின்றபடி இறைவனை வணங்கினார். கண்மூடி தியானத்தில் இருந்த ராஜேந்திரன், ஏதோ ஓர் உணர்ச்சியால் உந்தப்பட்டு திடீரென விழிகளைத் திறந்தார். அப்போது அவருக்கு நேர் எதிரே, சர்வ நடன அலங்காரத்துடன் ஓர் இளம்பெண், கைகூப்பி, கண்களை மூடி இறைவனை வேண்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்தார்.
ராஜேந்திரன் விழிகளைத் திறந்த அதே நேரம், அந்தப் பெண்ணும் தனது விழிகளைத் திறந்து எதிரே இருக்கும் இளவரசரைப் பார்த்தாள். இருவரது விழிகளின் சந்திப்பில் மின்னல் வெட்டியது. இளவரசருக்குத் தனது கண்களாலேயே மரியாதையைத் தெரிவித்த அந்தப் பெண், சட்டென்று அங்கு இருந்து நகர்ந்துவிட்டாள். கண நேரத்தில் மறைந்துவிட்ட அந்தப் பெண்ணின் உருவம், ராஜேந்திரனின் மனதில் இருந்து அகல மறுத்து ஏதோ செய்தது.
கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்து முடிந்த பிறகு தளிச்சேரிப் பெண்களின் நடன நிகழ்ச்சி தொடங்கியது. என்ன ஆச்சரியம்? ராஜேந்திரன் மனதைக் கொள்ளை கொண்ட அந்தப் பெண், நடனக்குழுவில் தலைமைப் பெண்ணாகக் கலந்து கொண்டு மேடையில் தோன்றி அழகாக நடனம் ஆடினாள். குழுவில் 10 பெண்கள் நடனம் ஆடியபோதிலும், நடுநாயகமாக நின்று நடனம் ஆடிய அந்தப் பெண் மட்டுமே ராஜேந்திரன் கண்களுக்குத் தோன்றினாள். வேறு எந்தப் பெண்ணும் அவரது கண்களுக்குத் தெரியவில்லை.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
அதுமட்டும் அல்ல. உடன் வந்த படை வீரர்கள், பணியாளர்கள், கோவில் வளாகம் அனைத்தும் ராஜேந்திரன் பார்வையில் இருந்து மறைந்து போயின. நடனம் ஆடுவதற்கு ஏற்ற நகை அலங்காரத்துடன், அழகாக வாரிய தலைப் பின்னல் - பொன்னிறமான மேனி - மாசுமருவற்ற மாம்பழம் போன்ற கன்னங்கள் - அலைபாயும் விழிகள் - எடுப்பான நாசி - அணிகலன்களுடன் கூடிய காது மடல்கள் - பவளத்தைத் தோற்கடிக்கும் ஈரமான உதடுகள் - வசீகரிக்கும் உடல் அமைப்பு - இவை அத்தனையையும் கொண்ட அந்தப் பெண், ராஜேந்திரனின் மனதுக்குள் சிறைப்பட்டுவிட்டாள்.
நடனம் ஆடிய பெண்களுக்கு இளவரசர் பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழுத் தலைவி என்பதால் முதல் ஆளாக பரிசினைப் பெறுவதற்காக வந்தபோது அந்தப் பெண்ணை மிக அருகில் நன்றாகப் பார்க்கும் வாய்ப்பு ராஜேந்திரனுக்குக் கிடைத்தது. தன்னை நோக்கிய அந்தப் பெண்ணின் பார்வையிலும் நாணம் கலந்த குளுமை இருந்ததை ராஜேந்திரன் தெரிந்து கொண்டார். கோவில் பணியாளர்களிடம் விசாரித்ததில், அந்தப் பெண்ணின் பெயர் ‘பரவை நங்கை’ என்ற பரவை நாச்சியார் என்பதும், கோவிலில் நடனம் ஆடும் தேவரடியார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், திருவாரூர் பெரிய தளிச்சேரி குழுவின் தலைமைப் பெண் என்பதும் ராஜேந்திரனுக்குத் தெரிய வந்தது.
அனைவரும் கோவிலில் இருந்து புறப்படும் சமயம், நன்றி சொல்லும் சாக்கில் ராஜேந்திரனின் அருகில் வந்த அந்தப் பெண், தனது காந்த விழிகளால் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கு இருந்து நகர்ந்து சென்றாள். தன்னை அந்தப் பெண் விரும்புகிறாள் என்பதை அவளது முகக்குறிப்பில் இருந்து ராஜேந்திரன் தெரிந்து கொண்டார். நாளடைவில் ராஜேந்திரன், அவளைச் சந்திப்பதற்காகவே அடிக்கடி திருவாரூர் கோவிலுக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
அந்தச் சமயங்களில் இருவரும் மனம்விட்டுப் பேசும் அளவுக்கு அவர்களது காதல் வளர்ந்தது. பரவை நங்கை என்ற நடனப்பெண் மீது ராஜேந்திரன் தீராக்காதல் கொண்டு இருப்பதையும், அவளையே மணக்க அவர் விரும்புவதையும் அறிந்து மன்னர் ராஜராஜன் அதிர்ச்சி அடைந்தார். எதிர்காலத்தில் தஞ்சைப் பேரரசின் மன்னராக ஆகக் கூடியவர், அரச குலத்தைச் சேர்ந்த பெண்ணை மணப்பதுதான் சரி என்பதை ராஜேந்திரனுக்கு ராஜராஜன் பக்குவமாக எடுத்துக் கூறினார்.
நிலைமையை ராஜேந்திரன் முழுமையாக அறிந்து கொண்டாலும் அவரால் பரவை நங்கையை மறக்க முடியவில்லை. ஒரு முறை பரவை நங்கையைச் சந்தித்தபோது, திருமணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதைத் தயக்கத்துடன் தெரிவித்தார். “திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் உன்னை நான் என்றைக்கும் கைவிடமாட்டேன்” என்று பரவை நங்கையிடம் ராஜேந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.
நாளடைவில், சேரர் குலம், பழுவேட்டரையர் குலம் உள்பட பல அரச குடும்பங்களில் இருந்து ராஜேந்திரனுக்குப் பெண் பார்த்து திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன. மன்னர் பல பெண்களை மணந்து கொண்டாலும் அவர்களில் ஒருவர் மட்டும் பட்டத்து ராணியாக அங்கீகரிக்கப்படுவார். ராஜேந்திரன் மனதில் பரவை நாச்சியார் ஏற்கனவே சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டதால் எவரையும் பட்டத்து ராணியாக அங்கீகரிக்கவில்லை.
Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
பரவை நங்கையை அதிகாரபூர்வமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற போதிலும் அவரை ராஜேந்திரன் கைவிட்டுவிட வில்லை. தனது ‘அணுக்கி’ என்ற அந்தஸ்தை பரவை நங்கைக்கு ராஜேந்திரன் வழங்கினார். அதென்ன அணுக்கி? மன்னர் அல்லது இளவரசரின் மனதுக்கு நெருக்கமான பெண், 'அணுக்கி' என்று அழைக்கப்படுவார். இதேபோல மன்னரின் விருப்பத்தைப் பெற்ற ஆண் வீரரை ‘அணுக்கர்’ என்று அழைப்பது உண்டு.
தற்காலத்தில் சிலர் திருமண பந்தத்தை மீறி தங்களுக்கு விருப்பமான பெண்ணைத் தங்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டு, ‘துணைவி’ என்று கவுரவமாகக் கூறிக் கொள்கிறார்கள் அல்லவா? அதுபோலத் தான் ‘அணுக்கி’ என்பதும். ராஜேந்திரனின் அதிகாரபூர்வ மனைவியாகி அரண்மனையின் அந்தப்புரத்துக்குச் செல்ல முடியவில்லை என்றாலும், ராஜேந்திரனின் உள்ளம் கவர்ந்தவர் என்பதால் ‘அணுக்கி’ என்ற அந்தஸ்தை பரவை நங்கை ஏற்றுக்கொண்டார்.
ராஜேந்திரன் - பரவை நங்கை உறவு, சிற்றின்பத்தை மையமாகக் கொண்டது அல்ல என்பதை அவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் திருவாரூர் கோவில், செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய கோவிலாக இருந்தது. அந்தக் கோவிலை கற்றளியாக, மிகப்பெரிய கோவிலாகக் கட்ட வேண்டும் என்ற தனது விருப்பதை ராஜேந்திரனிடம் பரவை நங்கை தெரிவித்தார். ராஜேந்திரன், உடனடியாக திருவாரூர் கோவிலை கற்றளியாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
இரண்டு ஆண்டுகளில் அந்தக்கோவில் கற்கோவிலாக மாற்றப்பட்டது. தனது காதலர் கட்டிய திருவாரூர் கோவிலுக்குத், தன்னால் இயன்ற அளவு நிதி வழங்க பரவை நங்கை தீர்மானித்தார். அந்தக் கோவில் கருவறையின் விமானம் மற்றும் சுற்றுச்சுவர்களில் தங்கத் தகடு பதிக்கும் பணிக்கு பரவை நங்கை 20,643 கழஞ்சு தங்கம் (சுமார் 110 கிலோ) கொடுத்தார்.
கதவுகள், மண்டபத் தூண்களை அலங்கரிக்க 42 ஆயிரம் பலம் எடையுள்ள செப்புத் தகடுகள் மற்றும் 428 முத்துக்கள், 7 மாணிக்கக் கற்கள், 36 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், 15,579 பலம் எடையுள்ள பிரமாண்டமான 28 குத்துவிளக்குகள், தங்கக் கைப்பிடி போட்ட சாமரங்கள் ஆகியவை உள்பட ஏராளமான ஆபரணங்களை அவர் காணிக்கையாக வழங்கினார்.
Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
திருவாரூர் கோவிலைக் கற்றளியாக்கும் பணி கி.பி.1028-ம் ஆண்டு தொடங்கி 1030-ம் ஆண்டு நிறைவு பெற்றது. அதன்பின் தங்கத் தகடுகளும், செப்புத் தகடுகளும் பதிக்கும் பணி 6 மாதங்களில் நடந்து முடிந்தது. கி.பி.1030-ம் ஆண்டு அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மன்னர் ராஜேந்திரன், திருவாரூர் வீதிகளில் தேரில் ஏறி பவனி வந்தார். அப்போது அவரது செயல், இதுவரை வரலாற்றில் எந்த மன்னரும் செய்யாத புரட்சிகரமான நடவடிக்கையாக இருந்தது. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!
Related Tags About Chola Nadu
Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.