கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-2

ஆரவார விழாவில் மக்கள் குதூகலம்

தலைநகர் தஞ்சை கோலாகலத்தில் மிதந்து கொண்டிருந்தது. விதிகள் தோறும் கட்டப்பட்ட வாழைமரங்கள், தென்னங்குலை, கப்புகளில் பிணைக்கப்பட்டு பறந்து கொண்டு இருந்த வண்ணக்கொடிகள் காற்றில் அசைந்தபடி நடன முத்திரைகளைப் பிரதிபலிக்க முயற்சித்தன. நகரின் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்ட மேடைகளில் இருந்தபடி நாதஸ்வரம், மேளம் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்கள், தங்கள் இசையால் மங்களகரமான சூழ்நிலையை உருவாக்கி அமர்க்களப் படுத்தினர்கள்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
முகத்தில் புன்னகையை ஏந்திய மகளிர்கள். தங்கள் வீடுகளின் முற்றத்தில் சாணம் தெளித்து, விதம் விதமான கோலங்கள் போட்டு அலங்கரிப்பதில் போட்டி போட்டனர். கோவிலில் பணிபுரியும் ஆடல் மகளிர்கள், நடனத்துக்கு உரிய பட்டாடை அணிந்து சர்வ அலங்காரத்துடன் அனைவர் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டு விவசாய வேலைகளில் ஓய்வில்லாமல் ஈடுபடுபவர்கள் கூட, அன்றையதினம் விடுமுறை எடுத்துக் கொண்டதுபோல, குளித்து புத்தாடை அணிந்து வீதிகளில் பீடுநடை போட்டனர்.
குதிரைச் சேவகர்கள் எனப்படும் குதிரைப்படை வீரர்கள், குதிரைகளில் கம்பிரமாக அமர்ந்து கொண்டு, ஆங்காங்கே கூடிய கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் தீவிரம் காட்டினார்கள். போர் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு இருந்ததால் அவற்றைத் தாமதமின்றி நிறைவேற்றும் மிடுக்குடன் அவர்கள், தீளமான ஈட்டிகளை ஏந்தியபடி நகர தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டு இருந்தனர்.

தஞ்சைக் கோட்டை வாசல் அகலத் திறந்து இருந்தது. அங்கே பெயரளவுக்கு மட்டுமே ஒரு சில காவலர்கள் நின்று கொண்டு இருந்தனர். கோட்டைக்குள் வருபவர்கள் எவரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. வசதியான இடத்தைப் பிடித்துக் கொண்டால், வாழ்நாளில் தவறவிடக்கூடாத இந்தநிகழ்ச்சியை நன்றாகப் பார்க்கலாம் என்பதால், மக்கள் நெருக்கியடித்து தஞ்சை அரண்மனையை நோக்கிச் சாரை சாரையாகச் சென்ற வண்ணம் இருந்தனர்.
தஞ்சை நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள், புட்டுமா, தயிர் சாதம், புளியோதரை போன்ற சித்ரான்னங்களை கட்டிக்கொண்டு மாட்டு வண்டிகளில் வந்து குவிந்து இருந்தனர். தஞ்சை நகரின் பிரமாண்டத்தையும், அலங்கார வேலைப்பாடுகளையும் அவர்கள் வியந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆங்காங்கே தெருக்களில் இருந்த சிறிய கோவில்களில் இளவரசர் பெயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன.

நகரில் ஏதோ மிக முக்கியமான விழா நடைபெறப் போகிறது என்பதை அறிந்து கொண்ட மேகக்கூட்டங்கள், அந்த விழாவைப் பார்க்கும் ஆர்வத்தில், திரண்டு வந்து தஞ்சை நகர் மீது குடிகொண்டது போலிருந்தன. வானம் முழுவதும் வியாபித்து இருந்த மேகக்கூட்டங்களுக்கு இடையே, ஆங்காங்கே தோன்றிய சிறிய இடைவெளியில் ரகசியமாக நுழைந்த சூரியக்கதிர்களும், அங்கிருந்தபடி நகரின் ஆரவாரத்தை எட்டிப் பார்த்தன. நகர் முழுவதும் இதமான குளிர் காற்று, குதூகலத்துக்குச் சாமரம் வீசிக்கொண்டு இருந்தது. நகரில் நடைபெற்ற இத்தகைய ஒவ்வொரு நிகழ்வும், இன்றைய தினம் தஞ்சை வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்பதைப் பறைசாற்றிக் கொண்டு இருந்தன.
ஆம்! 50 ஆண்டுகளாக மாமன்னர் ராஜராஜனுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றிய அவரது ஒரே மகன் மதுராந்தகன் (ராஜேந்திரன்), நீண்ட காலத்திற்குப் பிறகு தஞ்சைப் பேரரசின் பட்டத்து இளவரசராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கும் சிறப்பான நிகழ்ச்சிக்கு அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Read Also: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு
மன்னர் ராஜராஜனுக்கு மதுராந்தகன் ஒரே மகன் என்பதால், அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற போட்டிக்கே வழி இல்லை. தனது மகனுக்கு நல்ல அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதாலேயே இளவரசராகப் பட்டம் சூட்டும் விழாவுக்கு ராஜராஜன் காலம் தாழ்த்தி வந்தார். சோழ மன்னர்களின் முடிசூட்டு விழா, வழக்கமாக சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் நடைபெறும்.
அங்குள்ள அந்தணர்கள், வேத மந்திரங்கள் முழக்கத்துக்கு இடையே மன்னரின் தலையில் சோழர் குலச் சின்னமான மணிமுடியை அணிவிப்பார்கள். இப்போது மதுராந்தகனை இளவரசராக அறிவிக்கும் விழா என்பதால் இந்த விழா, தஞ்சை அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் சோழப் பரம்பரையின் அடுத்தகட்ட முக்கியமான நகர்வு என்பதால் இந்த விழா அனைவராலும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil | Part-2
கோலாகலமான இந்த விழாவிற்காக அன்றையதினம் தஞ்சைப் பகுதி முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருந்தாலும், முக்கிய கேந்திரமான தஞ்சை அரண்மனை மட்டும் சற்றுப் பொலிவு குன்றியே காணப்பட்டது. கடந்த சில மாதங்களாக மன்னர் ராஜராஜன், மனக்கவலையுடன், எதிலும் உற்சாகம் இல்லாமல் காணப்பட்டதன் எதிரொலியாக தஞ்சை அரண்மனையிலும் ஒருவிதமான சோகம் படர்ந்துஇருந்தது.
தஞ்சைப் பேரரசை வடக்கே வேங்கி வரையிலும், தெற்கே இலங்கை வரையிலும், மேற்கே மாகோதை (கொடுங்களூர்) வரையிலும் விரிவுபடுத்தியதோடு, இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாகக் கடற்படையுடன் சென்று, சேர நாட்டிற்கு நேர் மேற்கே கடலில் உள்ள சாந்திமத்தீவு எனப்படும் லட்சத்தீவையும் கைப்பற்றியவர் - எத்தனையோ நூற்றாண்டுகள் ஆனாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் மாபெரும் கற்கோவிலை சிவனுக்காகக் கட்டி சாதனை நிகழ்த்திய மாமன்னர் ராஜராஜனுக்குக் கவலையா? ஆம்! அவரது கவலைக்கு ஒன்றல்ல இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

சோழ மன்னர்களின் வரலாறு, நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. அவர்கள் பரம்பரை, பல யுகங்களுக்கு முன்னே தொடங்கியது என்பதைச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. மன்னர் ராஜேந்திரன் காலத்திய திருவாலங்காட்டுச் செப்பேடு உள்பட பல செப்பேடுகள், சோழர்களின் முன்னோராக சூரியனைச் சுட்டிக் காட்டுகின்றன. அதன் பின்னர் மனு என்பவரில் தொடங்கி, ராஜேந்திரன் வரையிலான 35 மன்னர்களை அந்தச் செப்பேடுகள் வரிசைக் கிரமமாகப் பட்டியலிடுகின்றன.
அந்தப் பழங்காலச் சோழ மன்னர்கள் அனைவரின் முழு வரலாறும் நமக்குக் கிடைக்கவில்லை. தொண்டை மண்டலத்தில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் அந்தச் சோழ மன்னர்கள் அனைவரின் வரலாற்றையும் சங்க இலக்கியங்கள் விவரிக்கவில்லை.

8-ம் நூற்றாண்டுக்குப் பிந்திய சோழ மன்னர்கள் பற்றிய வரலாறுகள் மட்டுமே கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியாக ஆதாரபூர்வமாகக் கிடைத்து இருக்கின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் 8-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம், சோழர்களின் இருண்ட காலம் எனப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களுக்குச் சோழர்கள் அடங்கி இருந்ததும், தமிழகத்தில் களப்பிரர்கள் ஊடுருவி ஆட்சியைப் பிடித்து இருந்ததும் இதற்குக் காரணம் ஆகிவிட்டது.
8-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ வம்சத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர், மன்னர் விஜயாலயன் (கி.பி.846-881). அவர் தொடங்கி வைத்த வரலாறு, பிற்காலச் சோழப் பரம்பரை என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. மன்னர் விஜயாலயன் காலத்தில், ஆட்சியின் எல்லை, தஞ்சை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் திருவாலங்காட்டுச் செப்பேடு என்ற குறுகிய அளவிலேயே இருந்தது.

Read Also: அரசன் மற்றும் அறிவாளியான விவசாயின் கதை
அவருக்குப் பின்னர் அரியணை ஏறிய ஒவ்வொரு மன்னரும் தங்கள் திறத்தால் சோழ அரசின் எல்லையை விரிவுபடுத்தி, சோழ வம்ச ஆட்சியை நிலை நிறுத்தினார்கள். மாமன்னர் ராஜராஜன் (கி.பி.985-1014) ஆட்சியின் போது சோழப் பேரரசின் எல்லை, வடக்கே வேங்கி, தெற்கே ஈழம், மேற்கே மாகோதை (கொடுங்களூர்) வரையிலும் விரிந்து பரந்து பிரமாண்டத்தை எட்டியது. இத்தகைய ஆட்சி விரிவாக்கம் ஏற்படுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர், அவர் பெற்ற ஒரே மகன், பிற்காலத்தில் ராஜேந்திர சோழன் என்று அழைக்கப்பட்ட மதுராந்தகன் என்பதை வரலாற்று ஆதாரங்கள் பெருமையுடன் எடுத்துக் காட்டுகின்றன.

வியப்பான வினோதம்

கம்போடியா நாட்டில் மன்னர் சூர்யவர்மன் கட்டிய உலகின் மிகப்பெரிய இந்துக்கோவில் அங்கோர் வாட், சியம் ரீப் என்ற நகர் அருகே அமைந்து இருக்கிறது. சயாம் - அதாவது தாய்லாந்து நாட்டுப் படைகளைத் தடுத்து நிறுத்தி விரட்டிய இடம் என்பதைக் குறிக்கும் வகையில் அந்த நகருக்கு சியம் ரீப் என்று பெயர் வைக்கப்பட்டது. மன்னர் ராஜேந்திரன், படையெடுத்து வந்த பாண்டியர்களை அவர்களது மீன் கொடியைச் சுருட்டிக் கொண்டு ஓடச் செய்த இடத்தின் பெயர் மீன் சுருட்டி.

Read Also: Freedom Is Our Birthright, சுந்திரம் எங்கள் பிறப்புரிமை
இந்த ஊர், கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ளது. காரணப் பெயர்களான மீன் சுருட்டி, சியம் ரீப் ஆகிய இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த, ஆனால் 3 ஆயிரம் மைல் இடைவெளித் தொலைவில் ஆட்சி செய்த மன்னர்கள் ராஜேந்திரனும், சூர்யவர்மனும், தங்களது எதிரிப்படைகளை விரட்டிய இடம் அருகே, ஒன்றுபோல வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களைக் கட்டி இருப்பது வினோதமாகப் பார்க்கப்படுகிறது. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook